Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

காதல் யந்திரம்

காதல் யந்திரம்


சிறியவனாயிருந்த காலத்தில் எந்தப் பொருளையாவது தொலைத்துவிட்டு அப்பாவிடம் அடி வாங்கும்பொழுதெல்லாம் யோசித்திருக்கிறேன், கடந்த காலத்துக்கு சென்று அந்தப் பொருளை எங்கு வைத்தேனெனெத் தெரிந்து கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? காலயந்திரம் உருவாக்கும் சாத்தியக்கூறுகளுக்கான எனது தேடல் இப்படித்தான் துவங்கியது. பள்ளிக்காலம் வரைக்கும் எப்படியாவது கடந்த காலத்துக்கு செல்வதே எனது எதிர்கால இலட்சியமாக இருந்ததென்று சொல்லலாம். பள்ளியிறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த சமயம் உலகம் அழியப்போவதாக பரபரப்பான செய்திகள் வந்தபொழுதுதான் Nostradamus அறிமுகமானார். எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே கணித்திருக்கிறார் என்ற ஆர்வத்தில் அவரது The Prophecies புத்தகத்தை தேடிப்படித்தபோதும் எனக்கதில் பெரிய ஈர்ப்பு வரவில்லை. அறிவியலுக்கு அப்பாற்பட்ட எதனையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


 


+2 முடித்து திருச்சி RECயில் EEE சேர்ந்தபின்னர் எலக்ட்ரானிக்ஸ் சிப்புகள் எல்லாம் விதவிதமாக பிணைந்து காலயந்திரமாக உருவாவது போல கனவு கண்டேன், இரவு பகல் இரண்டிலும். கல்லூரிகாலத்தில் தான் வெறும் தேடலாக இருந்த எனதார்வம் ஓர் ஆராய்ச்சிக்கான துவக்கமாக உருமாறியிருந்தது. Time machine, time travel குறித்த புனைவுகள், கட்டுரைகள், ஆராய்ச்சிகள் என எல்லாவற்றையும் தேடித்தேடி வாசித்தேன். Sci-Fi திரைப்படங்கள் எனது கணினித் திரையில் விடிய விடிய ஓடிக்கொண்டிருந்த காலமது. காலம் என்பது நான்காவது பரிமாணம் என்பதும், கடந்த காலமும் எதிர்காலமும் சந்திக்கும் புள்ளிதான் நிகழ்காலமென்பதால், நிகழ்காலம் என்ற ஒன்றே கிடையாதென்பதும் புரிபடத் துவங்கியது. எனது புரிதலைக்கொண்டு கல்லூரி இறுதியாண்டில் காலயந்திரம் உருவாக்குவதற்கான Proof Of Concept மாதிரி நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் விளக்கினேன். எவனும் மதிக்கவில்லை. வெறுப்பாக வந்தது.


 


கல்லூரி முடித்ததும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து டெல்லிக்கு வந்த பின்னரும் காலயந்திரம் தன்னை உருவாக்க சொல்லி என்னைத் துரத்திக்கொண்டே இருந்தது. அலுவல் நேரம் போக தினமும் ஆறு மணிநேரமாவது இதற்காக செலவு செய்தேன். எனது அறை கிட்டத்தட்ட ஓர் ஆய்வுக்கூடம் போலவே வளர்ச்சியடைந்திருந்தது. நான்காண்டு உழைப்பு பெரிய முன்னேற்றமெதனையும் தந்துவிடவில்லை. போகாத ஊருக்கு வழித் தேடுகிறேனோ என்று சலிப்பேற்பட்ட போதும் புதிய ஊரினைக்கண்டு பிடிக்கும் காட்டுவழிப் பயணத்தைப்போல எனது ஆராய்ச்சி தொடர்ந்துகொண்டிருந்தது. எனது விடாமுயற்சி வீண்போகவில்லை. கடந்த காலம், எதிர்காலம் இரண்டுக்கும் பயணிக்கும்படி உருவாக்கியிருந்த எனது காலயந்திரம் அன்றிரவு எதிர்காலத்துக்கு மட்டும் வேலை செய்ய துவங்கியிருந்தது. காலயந்திரத்தில் என்னை இணைத்துக் கொண்டு அம்மாவை நினைத்தபடி கண்மூடினேன். அடுத்த ஓராண்டில் எனக்கும் அம்மாவுக்கும் நடக்கும் சந்திப்புகள் மனத்திரையில் ஓடத் துவங்கின. ஓராண்டுக்குப்பிறகு வெற்றுத்திரையே தெரிந்தது. காலயந்திரத்திலிருந்து வெளியே வந்தேன். எதையோ சாதித்துவிட்ட திருப்தியிருந்தது. சட்டென அந்த யோசனை வரவும் மீண்டும் காலயந்திரத்தில் என்னை இணைத்துக் கொண்டு காலயந்திரத்தையே நினைத்த படி கண்மூடினேன். முதல் காட்சியைப் பார்த்ததுமே என் இதயம் துடிப்பதை நிறுத்தி மகிழ்ச்சியில் குதிக்கத் துவங்கியது. ஆம், அடுத்தநாள் காலை அது கடந்த காலத்துக்கும் வேலை செய்வதை நான் பரிசோதிக்கும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. காலயந்திரத்திலிருந்து வெளியே வந்தேன். யுரேகா யுரேகா என்று கத்திக்கொண்டு வீதியில் ஓட வேண்டும் போலிருந்தது. உற்சாகமிகுதியில் மதுவருந்துவதற்காக அந்த மதுவிடுதிக்குப் போயிருந்தேன். மூன்றாவது கோப்பை VSOP உள்ளே போனபிறகுதான் பக்கத்து டேபிளில் தனியே இருந்த அவனை நன்றாகப் பார்க்க முடிந்தது.


 


‘டேய், நீ அருள் தான?’ என்று கேட்டுக்கொண்டு அவனை நெருங்கினேன். அருள்முருகன் எனது கல்லூரித் தோழன். இத்தனை ஆண்டுகள் கழித்து இங்கெப்படி? அதுவும் தனியாக மதுவருந்திக்கொண்டு? விசாரித்த பிறகு எல்லாவற்றையும் சொன்னான் விரக்தியோடு. கல்லூரி முடிந்ததும் அவனும் பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் மூன்றாண்டுகள் வேலை பார்த்துவிட்டு MBA படிக்க இங்கு டெல்லி கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். அங்கே இளாவும் சேர்ந்திருக்கிறாள். இளா என்றால் இளவரசி. அவளும் எங்களுடையக் கல்லூரித்தோழி தான். பழைய கல்லூரித்தோழர்கள் என்பதால் இயல்பாகவே நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். இரண்டாமாண்டு தான் அவர்களுடைய நட்பு காதலாக மலர்ந்திருக்கிறது. காதலே வெட்கப்படுமளவுக்கு  ஆறுமாதம் காதலித்திருக்கிறார்கள். அதன்பிறகு வழக்கம்போல இளா வீட்டில் அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் வரை செல்கையில் தன் காதலை வீட்டில் சொல்லியிருக்கிறாள். ஆனால் அன்பையே ஆயுதமாக்கி அவளை அந்தத்  திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்திருக்கிறார்கள். இவனிடம் வந்து ‘என்ன மன்னிச்சிடு அருள். எல்லாத்தையும் மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ’ என்று அறிவுறை கூறிவிட்டுக் கொஞ்ச நேரம் அழுதுவிட்டு சென்றிருக்கிறாள். நாளைக்கு அவளுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறதாம். இவன் துக்கம் தாங்காமல் இங்கு வந்திருக்கிறான்.


 


அவன் கதை முழுவதையும் கேட்டதும் எனக்கிருந்த உற்சாகமே போய் விட்டிருந்தது. இருவரும் இன்னும் மூன்று கோப்பை அருந்தினோம். அவன் தானே பேசிக்கொண்டு அழ ஆரம்பித்தான். நான் சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்தேன். புகைக்குள் அருள் தெரிந்தான். இளா தெரிந்தாள். கால யந்திரமும் தெரிந்தது. அருளை எழுப்பி அவன் காதலை நான் காப்பாற்றுவதாக சொன்னேன். அவன் நம்பாமல் பார்த்தான். எனது செல்பேசியெண்ணை அவனிடம் கொடுத்து அடுத்த நாள் காலை 11 மணிக்கு என்னை தொடர்புகொள்ள சொல்லிவிட்டு அறைக்குத் திரும்பினேன். எனக்கு ‘திக்’ ‘திக்’ என்றிருந்தது.


 


அடுத்த நாள் காலை ‘எதிர்காலம்’ சொன்ன படியே, எனது காலயந்திரம் கடந்த காலத்துக்கும் வேலை செய்யத்துவங்கியிருந்தது. எதிர்காலம் போலவே இதுவும் ஓராண்டுக்கு மட்டுமே. எதிர்கால நிகழ்வுகளைப் பார்க்க மட்டும்தான் முடியும். ஆனால் கடந்த கால நிகழ்வுகளை மனத்திரையில் பார்க்கலாம் + குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சென்று நமது செயல்களை மாற்றிவிடலாம். அதுதான் எனக்கு அருளையும் இளாவையும் சேர்த்துவிடும் நம்பிக்கையைத் தந்தது. பரிசோதனை செய்துகொள்வதற்காக காலயந்திரத்துடன் என்னை இணைத்துக்கொண்டு கடந்தகாலத்தை தெரிவு செய்தேன். அருளை மனதில் நினைத்துக்கொண்டு கண்மூடினேன். முந்தைய நாள் சந்திப்பு மனத்திரையில் ஓடியது. எனக்குத் தேவையான கடைசி இரண்டு நிமிட கால இடைவெளியைத் தெரிவு செய்து கொண்டு கடந்த காலத்துக்குள் நுழைந்தேன். என்னுடைய செல்பேசிக்கு பதிலாக வேறொரு எண்ணை அவனிடம் கொடுத்துவிட்டு கால யந்திரத்திலிருந்து வெளியேறினேன். எதிர்பார்த்தபடியே 11.15 வரை அவனிடமிருந்து அழைப்பு வரவில்லை. அதன்பிறகு அவனுடைய எண்ணுக்கு நானே அழைத்தேன். வேறொரு எண்ணைக் கொடுத்துவிட்டதற்காக என்னைத்திட்டினான். நான் போதையில் தவறாக சொல்லியிருப்பேனென்று மன்னிப்பு கேட்டுவிட்டு என் முகவரி சொல்லி எனதறைக்கு அவனை வரச்சொல்லியிருந்தேன். அவன் வரும்வரை எனக்கு இருப்பு கொள்ள வில்லை.


 


நான் செய்யப்போவது எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்குமா என்று படபடப்பாக இருந்தது. கால யந்திரந்திலேயே பார்த்துவிடலாமென அதனுடன் என்னை இணைத்துக்கொண்டு எதிர்காலத்தை தெரிவு செய்தேன். அருளையும், இளாவையும் மனதில் நினைத்துக்கொண்டு கண்மூடினேன். கதவு தட்டப்படும் அலாரம் காலயந்திரத்தில் கேட்டது. எரிச்சலோடு கால யந்திரத்திலிருந்து வெளியேறினேன். அருள் தான் வந்திருந்தான். எனது அறையையே வித்தியாசமாகப் பார்த்தான். அவனை அமரச் சொல்லிவிட்டு அவனுக்கு எனது காலயந்திரம் பற்றி முழுமையாக விளக்கினேன். நான் அதனை முழுமையாக பரிசோதித்துவிட்டேன் என்பதை நான் கடந்த காலத்துக்கு போய்தான் அவனிடம் கொடுத்த செல்பேசியெண்ணை மாற்றியதைச் சொல்லிப் புரிய வைத்தேன். நம்பியும் நம்பாமலும் என்னைப் பார்த்தான். நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும், எல்லாம் நல்லபடியாக நடக்குமென நம்பிக்கையளித்தேன். தலையாட்டினான். அவர்களுக்கிடையேயான கடைசிச் சந்திப்பில் என்ன நடந்ததென விசாரித்தேன். எல்லாவற்றையும் சொன்னான். கடைசியாக அவள் ‘என்ன மன்னிச்சிடு அருள். எல்லாத்தையும் மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ’ என்று சொன்னதாகவும் இவன் அமைதியாக இருந்ததாகவும், அவள் அழுதுகொண்டே சென்று விட்டதாகவும் சொன்னான். எனக்கு எரிச்சலாக வந்தது. விழுந்து விழுந்து காதலிக்கிறான்கள். ஆனால் அதைக் காப்பாற்றத் தெரியவில்லை.


அவர்களின் பெற்றோரைப் போலவே அவனும் அன்பையே ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டுமென சொல்லி அவனை காலயந்திரத்தோடு இணைத்தேன். இளாவை நினைத்துக்கொண்டு கண்மூடினான். அவன் கடந்த காலத்துக்குள் நுழையவேண்டிய கால இடைவெளியைத் தெரிவு செய்தான்.


 


‘…என்ன மன்னிச்சிடு அருள். எல்லாத்தையும் மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ’


‘இளா, உன்னோட சூழ்நிலை எனக்குப் புரியுது. நீ என்ன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் உன்னக் கட்டாயப்படுத்தல. அதே மாதிரி நான் இன்னொரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கனும்னு தயவு செஞ்சு என்னக் கட்டாயப்படுத்தாத. எனக்கு இன்னொரு கல்யாணம் கண்டிப்பா நடக்காது.பை’


 


சொல்லிக்கொடுத்த மாதிரியே சொல்லிவிட்டு கால யந்திரத்திலிருந்து வெளியேறினான்.


‘அப்பாடா இப்போதான் கொஞ்சம் பாரம் கொறஞ்ச மாதிரி இருக்குடா’


‘அருள், ஒன்னும் கவலப்படாத. எல்லாம் நல்லபடியா நடக்கும்! இளாவோட நம்பர் கொடுத்துட்டுப் போ’


‘நோட் பண்ணிக்கோ 9948645533’


அன்று கவலை குறைந்தவனாக அவனது விடுதிக்குக் கிளம்பிப் போனான்.


 


கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு இளாவுக்குத் தொலைபேசினேன். மிகவும் பதற்றமாக இருந்தது அவள் குரல். என் பெயரைச் சொன்னதும் அழ ஆரம்பித்துவிட்டாள். முந்தைய நாளிரவு மதுவருந்திவிட்டு வந்து விடுதியறையில் அருள் தற்கொலை செய்து கொண்டதாகவும் விடுதியே பரபரப்பாக இருப்பதாகவும் காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட்டிருப்பதாகவும் சொன்னாள். கடந்த காலத்தில் மாற்றம் செய்ததால் எல்லாமே மாறிவிட்டிருந்தது. முந்தைய நாளிரவு என்னுடன் மதுவருந்திவிட்டுப் போனவன் தற்கொலை செய்துகொண்டிருக்கிறான். அப்படியானால் இளாவின் செல்பேசியெண் எனக்கு எப்படி கிடைத்திருக்கும்? குழப்பமாக இருந்தது. விடுதிக்கு உள்ளேயிருந்து யாரையும் வெளியிலும், வெளியிலிருந்து யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லையெனவும் அவள் வெளியில் மாட்டிக்கொண்டதாகவும் உள்ளே போக முடியவில்லையெனவும் அழுதாள். நான் வரும்வரை அவளை வெளியிலேயே இருக்க சொல்லிவிட்டு அவர்களுடைய விடுதிக்கு கிளம்பினேன்.


 


வாசலருகே இளா அழுதவாறு நின்றுகொண்டிருந்தாள். காவல்துறை அவள் மீதுதான் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குத் தொடரும் ஆபத்திருப்பதைச் சொன்னதும் பதற்றமாய் என்னைப் பார்த்தாள். எனக்கெல்லாம் தெரியுமென சொல்லி அவளை எதுவும் பேச வேண்டாமெனக் கேட்டுக்கொண்டு எனதறைக்கு அழைத்துப்போனேன். எனது அறையையே வித்தியாசமாகப் பார்த்தாள். அவளை அமரச் சொல்லிவிட்டு அவளுக்கு எனது காலயந்திரம் பற்றி முழுமையாக விளக்கினேன். நான் அதனை முழுமையாக பரிசோதித்துவிட்டேன் என்பதையும் புரிய வைத்தேன். நம்பியும் நம்பாமலும் என்னைப் பார்த்தாள். நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும், எல்லாம் நல்லபடியாக நடக்குமென நம்பிக்கையளித்தேன். தலையாட்டினாள். அவர்களுக்கிடையேயான கடைசிச் சந்திப்பில் என்ன நடந்ததென விசாரித்தேன். எல்லாவற்றையும் சொன்னாள். கடைசியாக அவன்


இளா, உன்னோட சூழ்நிலை எனக்குப் புரியுது. நீ என்ன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் உன்னக் கட்டாயப்படுத்தல. அதே மாதிரி நான் இன்னொரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கனும்னு தயவு செஞ்சு என்னக் கட்டாயப்படுத்தாத. எனக்கு இன்னொரு கல்யாணம் கண்டிப்பா நடக்காது.பை


 என்று சொன்னதாகவும், இவள்


‘இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு மட்டும் இஷ்டமா அருள்? நீ பையனா பொறந்துட்ட, உன்னால கல்யாணமே பண்ணிக்காம இருக்க முடியும். நா பொண்ணாப் பொறந்துட்டேன் கல்யாணம் பண்ணிக்காம இருக்க நா விருப்பப்பட்டாலும், இந்த சமுதாயம் விடாது. மனசுல உன்ன நெனச்சுட்டு இன்னொருத்தனோட வாழ்ந்துதான் ஆகனும். அதத்தான் பண்ணப்போறேன்.பை.’ என்று சொல்லிவிட்டு அழுதுகொண்டே சென்று விட்டதாகவும் சொன்னாள். எனக்கு எரிச்சலாக வந்தது. விழுந்து விழுந்து காதலிக்கிறாள்கள். ஆனால் அதைக் காப்பாற்றத் தெரியவில்லை. அருளைப் போலவே அவளும் மரணத்தையே ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டுமென சொல்லி அவளை காலயந்திரத்தோடு இணைத்தேன். அருளை நினைத்துக்கொண்டு கண்மூடினாள். அவள் கடந்த காலத்துக்குள் நுழையவேண்டிய கால இடைவெளியைத் தெரிவு செய்தாள்.


 


‘இளா, உன்னோட சூழ்நிலை எனக்குப் புரியுது. நீ என்ன தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் உன்னக் கட்டாயப்படுத்தல. அதே மாதிரி நான் இன்னொரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கனும்னு தயவு செஞ்சு என்னக் கட்டாயப்படுத்தாத. எனக்கு இன்னொரு கல்யாணம் கண்டிப்பா நடக்காது.பை’


 


‘மன்னிச்சிடு அருள். நீயும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவன்னு எதிர்பார்த்துதான் நான் இப்படியொரு முடிவுக்கு ஒத்துக்கிட்டேன். நீ இப்படி சொன்னபின்னாடி நான் மட்டும் சந்தோசமாவா இருந்திடப்போறேன்? உன்னதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு முடிஞ்ச வரைக்கும் போராடுவேன். இன்னொருத்தருக்கு தான்னு முடிவாயிடுச்சுன்னா, அந்த கல்யாணத்துக்கு முன்னாடி என் உயிர் போயிடும்.’


 


சொல்லிக்கொடுத்த மாதிரியே சொல்லிவிட்டு கால யந்திரத்திலிருந்து வெளியேறினாள்.


‘அப்பாடா, இப்பதான் கொஞ்சம் பாரம் கொறஞ்ச மாதிரி இருக்குப்பா’


‘இளா, ஒன்னும் கவலப்படாத. எல்லாம் நல்லபடியா நடக்கும்’


அன்று கவலை குறைந்தவளாக அவளது விடுதிக்குக் கிளம்பிப் போனாள்.


 


ஒரு மாதம் கழித்து ஒருமுறை இருவரையும் ஒரு திரையரங்கில் சந்தித்தேன். மீண்டும் இணைந்து விட்டார்கள் போல. அவனுக்குத் தெரியாமல் அவளும், அவளுக்குத் தெரியாமல் அவனும் ரகசியமாக நன்றி சொன்னார்கள். நான் இருவருக்கும் பொதுவாக புன்னகைத்தேன்.


 


ஆறுமாதம் கழித்து அருள் தொலைபேசியில் என்னையழைத்து மிகவும் பதற்றமாகப் பேசினான்.


 


‘மச்சான், தப்புப் பண்ணிட்டோம்டா…இளா செத்துட்டாடா…’


‘எப்படிடா? என்ன நடந்தது?’


‘லீவ்ல வீட்டுக்குப் போயிருக்கா. அப்பவே கல்யாணத்த முடிச்சிடனும்னு அவங்க வீட்ல ரொம்ப கம்பல் பண்ணியிருப்பாங்க போல… விஷம் குடிச்சிட்டா… போலீஸ் இப்போ என்னத்தேடுதாம். அனேகமா உன் வீட்டுக்கும் இந்நேரம் போலீஸ் வந்துட்டிருக்கும்’


அவன் சொல்லி முடிப்பதற்குள் ஒரு சத்தத்தோடு அவன் செல்பேசி உயிரிழந்தது.


 


பதற்றத்தோடு கால யந்திரத்துடன் என்னை இணைத்துக்கொண்டு கடந்த காலத்தை தெரிவு செய்தேன். இளாவை மனதில் நினைத்துக்கொண்டு கண்மூடினேன். கடந்த காலத்துக்குள் நுழையவேண்டிய கால இடைவெளியைத் தெரிவு செய்தேன்.


 


‘அப்பாடா, இப்பதான் கொஞ்சம் பாரம் கொறஞ்ச மாதிரி இருக்குப்பா’


‘இளா, ஒன்னும் கவலப்படாத. எல்லாம் நல்லபடியா நடக்கும். அப்பறம் ஒரு விசயம். இது சும்மா அருளுக்காக தான். நீ எந்த சூழ்நிலையிலயும் தற்கொலை முடிவுக்கெல்லாம் போகக்கூடாது. தற்கொலை பண்ணிக்கிறத விட நீங்க இப்பவே ஒரு பதிவுத்திருமணம் பண்ணிக்கிறது உங்களப் பாதுகாக்கும்’


 


நினைத்த மாதிரியே சொல்லிவிட்டு கால யந்திரத்திலிருந்து வெளியேறினேன்.


 


ஒரு மாதம் கழித்து அருளும், இளாவும் வந்திருந்தார்கள். அருள் வீட்டு சம்மதத்தோடு சொன்ன மாதிரியே பதிவுத்திருமணம் செய்துகொண்டு விட்டார்களாம். அப்புறம் இளா வீட்டிலும் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டு இரண்டாவது முறையாகத் திருமணம் நடக்கவிருக்கிறதாம். அழைப்பிதழ் கொடுத்துவிட்டுப் போனார்கள். எனது கால யந்திரம் காதல் யந்திரமாய் மாறிப்போனதில் மகிழ்ச்சியே.


 


அவர்களுடையத் திருமணத்திற்கும் சென்றிருந்தேன். பரிசுப்பொருளைக் கொடுத்துவிட்டு கேமராவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த போது கதவு தட்டப்படும் அலாரம் காலயந்திரத்தில் கேட்டது. எரிச்சலோடு கால யந்திரத்திலிருந்து வெளியேறினேன். அருள் தான் வந்திருந்தான். எனது அறையையே வித்தியாசமாகப் பார்த்தான். அவனை அமரச் சொல்லிவிட்டு அவனுக்கு எனது காலயந்திரம் பற்றி முழுமையாக விளக்கினேன். நான் அதனை முழுமையாக பரிசோதித்துவிட்டேன் என்பதை நான் கடந்த காலத்துக்கு போய்தான் அவனிடம் கொடுத்த செல்பேசியெண்ணை மாற்றியதைச் சொல்லிப் புரிய வைத்தேன். நம்பியும் நம்பாமலும் என்னைப் பார்த்தான். நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும், எல்லாம் நல்லபடியாக நடக்குமென நம்பிக்கையளித்தேன். தற்பொழுதுதான் இனி நடக்கப்போகிற எல்லாவற்றையும் எதிர்காலத்துக்குப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்ததைச் சொன்னேன்.


முதன்மதலாக அவன் கடந்த காலத்துக்கு சென்று பேசியதையும், இருந்தும் இளா பிடிவாதமாக இருந்ததால் அவன் தற்கொலை செய்துகொண்டதையும், பிறகு இளா கடந்தகாலத்துக்கு சென்று அவன் மனதை மாற்றியதையும், பின்னர் அவளும் தற்கொலை செய்துகொண்டதையும், இறுதியில் நான் கடந்த காலத்துக்கு சென்று இளா மனதை மாற்றி பதிவுத்திருமணம் செய்துகொள்ள வைத்ததையும், இரு வீட்டு சம்மதத்தோடு நடந்த இரண்டாவது திருமணத்தில் நான் கலந்து கொண்டதைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அவன் இப்போது வந்ததையும் சுருக்கமாகக்கூறினேன்.


 


பேயறைந்தவனைப்போல இருந்த அருள் , ‘நீ இன்னும் மாறவே இல்லையாடா’ என்று திட்டிவிட்டு தப்பித்து ஓடுபவனைப்போல் ஓடிவிட்டான்.


 


அதன்பிறகு என்னைக் கொண்டு வந்து இங்கே அடைத்துவிட்டார்கள். எல்லாம் அவனுக்கு உதவப்போய் வந்த வினை.


 


அந்த நோயாளி சொன்ன பதிலை ஒரு கதையைப்போல குறிப்பெடுத்துக்கொண்ட பொழிலன், பொன்னியிடம் சொன்னான் ‘its really different ponni’ . ‘yeah, But interesting. இத அதீத கற்பனைனு பாராட்டறதா இல்ல மனச்சிதைவு நோய்னு சொல்றதானு எனக்குத் தெரியல’ ஆமோதித்துவிட்டு அடுத்த வார்டுக்கு நகர்ந்தாள் பொன்னி.


 


‘முருகேசன்… நாங்க உளவியல் ஆய்வுக்காக உங்க கிட்ட பேச வந்திருக்கோம். நீங்க எப்படி இங்க வந்தீங்க?’


‘எனக்கு ரொம்ப நாளா என் முதுகுல யாரோ உட்காந்திருக்கிற மாதிரியே பயமா இருக்கு மேடம்…நான் சின்ன வயசுல எல்லாரையும் உப்பு மூட்டைத் தூக்கிட்டு விளையாடிட்டு இருக்கும்போது….’


வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
இப்பொழுது வந்ததற்கு பதிலாக, நீங்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம்.

அப்பொழுது அவரெனக்கு நல்ல தோழியாக மட்டும் தான் இருந்தார். எனது குறைகளை குறையென மட்டுமே சொல்லாமல் திருத்திக்கொள்ளும் வழியினை சொல்லித் தருவதிலும், என்னால் தீர்த்துவிட முடியாதெனத் தெரிந்த போதும் தனது வருத்தங்களை என்னிடம்… என்னிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டதிலும், தனது நெருங்கிய தோழிகளைக்காட்டிலும் என் மீது அவருக்கு அன்பும், நம்பிக்கையும் அதிகமுண்டென்பதை அவருடைய செயல்கள் அனிச்சையாய் நிரூபித்துக்கொண்டே இருந்தன. எனக்குள் மட்டுமே கூடு கட்டிக் குடியிருந்த எனது எதிர்காலக் கனவுகளெல்லாம் சிறகடித்து அவரிடம் பறந்து சென்றபோதும், அவரது அருகாமையில் மட்டுமே நான் முழுமையடைவதாய் உணர்ந்துகொள்ளத் துவங்கிய போதும், எங்களுக்குள் முளைத்த நட்பு காதலாய் மலருமென நான் எதிர்பார்க்க வில்லைதான். ஆனாலென்ன? நல்ல நட்பிலிருந்து மலர்வது காதலுக்கும் அழகுதானே?

காதலிக்கிறோமெனத் தெரிந்த பின்னும் வெளிப்படையாய்ச் சொல்லிக்கொள்ளாமலே காதலிக்கும் இன்ப அவஸ்தையை அனுபவித்திருக்கிறீர்களா? காதலிக்குப் பிடித்த பாடலை செல்பேசியில் அழைப்பிசையாகவும், காதலிக்குப் பிடித்த புகைப்படத்தை கணினித் திரையிலும், காதலியின் பிறந்த நாளைக்குறிப்பிடும் எண்ணில் செல்பேசி இணைப்பும் வைத்துக்கொண்டதுண்டா? காதலியின் அறைத்தோழி உதவியுடன் காதலிக்குப் பிடித்த பரிசுப்பொருளை அவள் தலையணைக்கடியில் ஒளித்துவைத்து, இரவு பனிரண்டு மணிக்கு அழைத்து பிறந்த நாளுக்கு வாழ்த்தி, தலையணையை எடுத்துப்பார்க்க சொன்னதுண்டா? நீங்கள் தேநீரும் உங்கள் காதலி குளிர்பானமும் குடிக்கின்றபோதும் தேநீர் சுட்டுவிட்டதாய்ச் சொல்லி அவள் குடித்த பாதி குளிர்பானம் குடித்ததுண்டா? இந்த கிறுக்குத்தனங்கள் கூட இல்லையென்றால் அப்புறமென்ன காதல்?

இரவுநேரப் பேருந்தில் தனியேப் பயணிக்கும் உங்கள் காதலி நெடுஞ்சாலை உணவகத்தில் பேருந்து நின்றபோதும் தனியே செல்ல பயந்து சாப்பிடவில்லையென அனுப்பிய ஒரு குறுஞ்செய்தி இரவு முழுக்க உங்களை உறக்கமிழக்கச் செய்திருக்கிறதா? உங்களுக்கு நம்பிக்கையில்லாத போதும் உங்கள் பிறந்தநாளில் நெடுந்தூரம் தனியே பயணித்து கோவிலுக்கு சென்று பிரார்த்திக்கும் உங்கள் காதலியின் அன்பைப் புரிந்து கொள்ள, உங்கள் மனம் பக்குவப்பட்டிருக்கிறதா? சின்ன விசயத்துக்கெல்லாம் கோபித்துக்கொள்ளும் உங்கள் காதலியிடம் பெரிய விசயத்தையும் கோபமூட்டாமல் சொல்லிவிடும் கலையை, காதல் உங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறதா? இப்படி கட்டுப்பாடற்ற அன்பில் துவங்கவில்லையென்றால் அப்புறமென்ன காதல்?

தனிமையில் உங்களைப் பொய்யாக கிண்டலடித்துக் கொண்டேயிருக்கும் காதலி, அவள் தோழிகளுக்கு முன்னால் உங்களை விட்டுக்கொடுக்காமல் பேசுவதைக் கவனித்திருக்கிறீர்களா? உங்களிடம் பேசும்போது ஒருமையில் அழைக்கும் காதலி, உங்களைப் பற்றி பிறரிடம் சொல்லும்போது மரியாதையோடுக் குறிப்பிடுவதை ரசித்திருக்கிறீர்களா? அது, உங்கள் காதலியைப்பற்றி மூன்றாம் நபரிடம் நீங்கள் பேசுகையில் ‘அவள்’ என்பதற்குப் பதிலாக ‘அவர்’ என்று விளிக்க உங்களைப் பழக்கியிருக்கிறதா? இப்படி ஒருவர் மீது ஒருவருக்கு மரியாதை ஏற்படுத்தாவிட்டால் அப்புறமென்னக் காதல்?

பெற்றோர் சம்மதிக்காத நிலையில் வீட்டைவிட்டு ஓடிவந்தாலும் இப்பொழுதிருப்பதைக் காட்டிலும் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வீர்களெனும் நம்பிக்கை தனக்கிருப்பதாக உங்கள் காதலி உங்களிடம் உளறியதுண்டா? அப்படி சொன்னபோதும் கூட நீங்கள் அவரை வீட்டைவிட்டு ஓடிவர சொல்லிவிட மாட்டீர்கள் எனும் அவரது நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றியிருக்கிறீர்களா? இப்படி ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை உருவாகாவிட்டால் அப்புறமென்ன காதல்?

காதலுக்காக உயிரிழப்பதைப்போலவே நீங்கள் காதலுக்காக உயிரை இழந்ததுண்டா எனக்கேட்பதும் முட்டாள்தனம் தான். ஆனால் உங்கள் உயிரை விட அதிகமாய் நீங்கள் நேசிப்பவர்கள் உங்கள் மீது வைத்திருந்த மதிப்பை, காதலினால் இழந்திருக்கிறீர்களா எனக் கேட்கலாம். உங்கள் காதலி உங்களைத்தவிர வேறொருவரை மணக்கமாட்டாள், உங்களுக்காக வீட்டைவிட்டு வரவும் தயாராயிருக்கிறாள் என்பதையெல்லாம் சொல்லி உங்கள் வீட்டில் சம்மதம் வாங்கிக் காத்திருக்கையில் காதலிக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதையறிந்து பதறியிருக்கிறீர்களா? காதலை நேரடியாய்ச் சொன்ன காதலி தன்னை மறந்துவிடச்சொல்வதற்கு தோழியைத் தூதனுப்பிய போதும் உங்களுக்கு அவர் மீது கோபம் வராமல் பரிதாபம் வந்ததுண்டா? குடும்பத்தின் மதிப்பையும் இழந்து காதலியையும் இழந்து சொந்த வீட்டுக்குள்ளேயே ஓர் அகதியைப் போல வெறுமையை உணர்ந்திருக்கிறீர்களா? இந்த இழப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அப்புறமென்ன காதல்?

விடிந்தால் உங்கள் காதலிக்கு திருமணம் என்ற நிலையில் உறங்கப் பிடிக்காமல் இரவு முழுக்க வோட்கா குடித்திருக்கிறீர்களா? நான் குடித்துக்கொண்டிருக்கிறேன். இது இருபத்து நான்காவது கோப்பை. பார்த்தீர்களா… அவருக்கும் இருபத்து நான்கு வயதுதான். என்ன? காதல் தோல்விக்காக குடிப்பது முட்டாள்தனமா? காதல் தோல்விக்காக யார் குடிக்கிறது? என்னுடைய துயரங்கள் உங்களுக்குப் புரியுமா? அவருக்கு சைனஸ் தொல்லை இருப்பதால் மழைக்காலத்தில் அடிக்கடி சளி பிடிக்கும். சின்ன விசயத்துக்கெல்லாம் கோபம் வரும். ஒரு விபத்தில் அவருடைய இடது கையில் எலும்புமுறிந்து பிளேட் வைத்திருப்பதால் எடை தூக்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். செண்ட், டியோடரண்ட் எல்லாம் அவருக்கு அலர்ஜி. கூட்டத்தில் சாப்பிடப்பிடிக்காது. அதிக நகைகளோ, மேக்கப்போ விரும்ப மாட்டார். புடவையைவிட சுடிதார்தான் பிடிக்கும். இப்படி ஆயிரம் விசயங்கள் அவரைப்பற்றி எனக்குத் தெரியும். எல்லாவற்றையும் அவருடையக் கணவர் சரியாகப் புரிந்து கொண்டு அவரை நேசிப்பாரா என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்ததற்குப் பதிலாக மகிழ்ச்சியாக இருந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம்.

யெஸ்! மிஸ்டர் எமன்! நீங்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம்.

----------------------------------------------------------

ஸ்ரீ துவங்கிய தொடருக்காக எழுதிய சிறுகதை.

விதிமுறைகள்:

1. பதிவின் தலைப்பு - “காதல் எனப்படுவது யாதெனில்…” (மாற்றக்கூடாது).
2. என்ன பதிவிடலாம் - இது தான் எழுதணும் என்கிற கட்டாயம் கிடையாது. பதிவு எதைப்பற்றி வேண்டுமானால் இருக்கலாம். கதை, கவிதை, நக்கல், கட்டுரை, மொக்கை………. என்ன வேணும்னா எழுதுங்க உங்கள் விருப்பம். (ஆனால் தலைப்போட கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கணும்)
3. பதிவு போட இன்னும் ஒருவரை அழைக்கணும். முன்பெல்லாம் இரண்டு மூன்று பேர் அழைக்கப்பட்டதால் தொடர் சங்கிலிகள் எங்காவது ஒரு தொடர்பு அறுந்தாலும் அவை கொஞ்சம் பயணித்தன. இங்கு ஒருவர் தான் அழைக்கப்படுகிறார் அதனால் நீங்கள் அழைப்பவரின் வசதியைக் கேட்டுவிட்டு கூப்பிடுங்கள்.

நான் அழைப்பவர் – இம்சையரசி
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
பொனாசிப்பட்டி ஆறுமுவம் பொண்டாட்டின்னா தெக்க அந்தரப்பட்டியில இருந்து வடக்க மகிளிப்பட்டி வரைக்கும் கொணமான பொம்பளைனு அத்தன சனத்துக்கிட்டயும் நல்ல பேரு. அவளும் யாருக்கும் எந்தக் கெட்டதும் மனசுல கூட நெனைக்க மாட்டா.நல்லது கெட்டதுக்கு வூட்டுக்கு வார சனத்த ஒரு வேலையும் செய்யவுட்டதில்ல.'அடநீங்க ஒக்காருங்கத்தாச்சி. செத்த நேரத்து வேல..நான் பாத்துக்கறேன்' னு சொல்லிட்டு அவளே செஞ்சு முடிச்சிருவா. யார் வூட்டு கண்ணாலங்காச்சினாலும் சரி, எழவுழுந்த வூடாருந்தாலும் சரி காய்கசவ அரியற எடத்துலயோ, யாணம்பாணம் வெளக்கற எடத்துலயோ அவள பாக்கலாம்.'ஆளுக்கு அஞ்சாறா செஞ்சா செத்த நேரத்துல செஞ்சிரலாம்'னு சிரிச்சுக்கிட்டே சொந்த வூடு மாரி மளமளன்னு வேலைய பாத்துக்கிட்டு இருப்பா. ஆறுமுவம் பொண்டாட்டி இருந்தா ஏழூரு வேலையயும் என்னா சேதி?ன்னு கேட்றுவான்னு பொம்பளையாளுங்க மெச்சிக்குவாங்க.

சாமி கும்பிட்டாக்கூட'ஆத்தா மகமாயி... இந்த வருசமாவது ஊர்ல மழயக்கொண்டா. எல்லா சனத்தையும் காப்பாத்து' னு வேண்டிக்கிட்டு 'எம்புருசனுக்கு நல்ல புத்தியக்கொடு'ன்னு கடசியாதான் வேண்டிக்குவா.ஆனா, போன செம்மத்துல அவ என்ன பாவம்பண்ணாளோ இப்புடி ஆறுமுவத்துக்கு வாக்கப்பட்டு சீரழியறா. கட்டிக்கொடுக்கும்போது அவங்கப்பாரோட சேந்து காடுகரய பாத்துக்கிட்டு ஆறுமுவம் ஒழுங்காதான் இருந்தான். வருசம் ஒன்னா வரிசையா நாலு புள்ள பொறந்துச்சு. நாளும் பொட்ட. அவங்கப்பாரு போய் சேந்த பின்னாடிதான் அவனுக்கு புத்தி கெட்டுப்போச்சு.'இந்தூர்ல ஈனப்பயதாங் இருப்பான்.நா அரிசி யாவாரம் பண்றேன்'னு பொண்டாட்டி புள்ளய ஊர்லயே வுட்டுட்டு உடுமலைப்பேட்டைக்கு ஓடிப்போயிட்டான். நாலு வருசமா ஆளு அட்ரசே காணோம். தேடிப்போன ஆளுங்களுக்கும் ஒரு ருசுவுங் கெடைக்கல. ஆனா அவன் திரும்பி வருவான்னு அவ நம்பிகிட்டு இருந்தா. 'ஏதோ ஆறுமுவம்பொண்டாட்டிங்கறதால இன்னும் இந்தூர்ல இருக்கா; வேற ஒருத்தியா இருந்தா இந்நேரம் பொறந்த ஊருக்கே பொட்டியக் கட்டியிருப்பா' ன்னு ஒரக்கேணியில தண்ணியெறச்ச சனம் பேசிக்கிச்சுங்க.

அந்த வருசம் மாரியாயி நோம்பியப்ப வந்திருந்தான். பொண்டாட்டி, புள்ளைங்களுக்கு இந்தான்னு ஒரு சீலத்துணி, சட்டத்துணி வாங்கியாரல. அப்பானு போயி கட்டிகிட்ட புள்ளைங்க ஏமாந்து போச்சுங்க. ஊர்ல இருந்த நாள்ல ஒரு நாக்கூட அவன் வூடு தங்கல. இச்சி மரத்தடில சீட்டாடுனான், மொட்டயன் காட்டுல சேத்தாளிங்க கூட மொடாமுழுங்கி மாரி கள்ளுக் குடிச்சான். குளித்தல போயி சினிமா பாத்தான். ஆனா கொண்டாந்த காசுல ஒத்த பைசா வூட்டுக்குனு குடுக்கல. நோம்பிக்கு மக்யா நாளு ராத்திரி கரகாட்டம்னு சொல்லி ரெக்கார்ட் டான்சு நடக்க மத்திப்பட்டிக்காரன் கொழா செட்டுல ஊரு முழுக்க பாட்டு சத்தம் மொழங்குச்சு. புள்ளைங்கள தூங்க வச்சிட்டு படுத்திருந்த ஆறுமுவம்பொண்டாட்டி அழுதுகிட்டே அவன திட்டிட்டு இருந்தா. 'நம்முடைய நடனத்தைப் பாராட்டி, இப்பொழுது உடுமலைப்பேட்டை அரிசி வியாபாரி திரு. ஆறுமுகம்பிள்ளை அவர்கள் ரூபாய் இரண்டாயிரத்தை அன்பளிப்பாக அளித்துள்ளார்கள். அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டு அடுத்த பாடலாக...' காதுல அதக்கேட்டதும் ஆங்காரம் வந்தவாளாட்டம் எந்திரிச்சுப் போனா...ரெக்கார்டு டான்சு நடந்த நாடகக்கொட்டாய்க்கு. அங்க தண்ணியப்போட்டுட்டு தள்ளாட்டத்துலதான் இருந்தான் ஆறுமுவம். அங்கன ரெண்டு பேருக்கும் நடந்த சண்டைல ரெக்கார்டு டான்சு நின்னு எல்லாரும் இவங்க சண்டய வேடிக்க பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. கடசில 'நீயெனக்கு பொண்டாட்டியுமில்ல;நா ஒனக்கு புருசனும்மில்ல' னு சொல்லிட்டு அப்பவே உடுமலப்பேட்டைக்கு போயிட்டான். அன்னைக்கு வூடு வர்றவரைக்கும் எல்லா சாமிக்கும் சாபம் குடுத்துக்கிட்டே வந்தா. நாலு பொட்டப்புள்ளைய வச்சிருக்காளே, அந்த மாரியாயி, ஆறுமுவம் பொண்டாட்டிய இப்படி சோதிக்குதேன்னு ஊரு சனம் வெசனப்பட்டுக்குச்சு.

அப்பறம் அவன் அங்கயே இன்னொருத்திய சேத்துக்கிட்டான்னு தெரிஞ்சதும், அவன் திரும்பி வருவான்;புள்ளைங்கள கர சேப்பாங்கற நெனப்பெல்லாம் அவளுக்கு அத்துப்போச்சு. தனியா வெள்ளாம வைக்க அவளால முடியாதுன்னு, இருந்த நெலத்தையும் குத்தைக்கு வுட்டுட்டு அவ கொத்து வேலைக்கு போவ ஆரம்பிச்சுட்டா. அப்பறம் ஊர்லயும் மழயில்லாம என்னப்பண்றதுன்னு தெரியாம கரும்பு வெட்ற வேலைக்குப் போவ ஆரம்பிச்சா. மில்லு தொறந்திருக்கற மாசத்துல சத்தியமங்கலத்துக்கோ, பெருகமணிக்கோ புள்ளைங்கள இழுத்துக்கிட்டுப் போயிருவா. மூனு மாசம், நாலு மாசம்னு வேலையிருக்கும். மில்லு மூடிட்டா ஊருக்கு வந்துரனும். ரெண்டு வருசம் இப்படியேப்போச்சு. புள்ளைங்க பள்ளியோடம் படிக்க ஒரே ஊர்ல இருந்தாதா சொகப்படும்னு ஊர்லயே இருக்கனும்னு மூனாவது வருசம் கரும்பு வெட்ற வேலைக்கும் போவல. பொழப்புக்கு என்னப்பண்றதுன்னு தெரியாம முழிச்சவளுக்கு ஒரு கரும்பின்ஸ்பெக்டர் சொன்னது சரியாப்பட்டுச்சு. ஏதோ மகளிர் சுய உதவிக்குழுவுன்னு பொம்பளைங்களுக்கு தொழில் செய்ய கவர்மெண்டு லோன் குடுக்குதுன்னு சொல்லவும், யார் யாரையோ புடிச்சு பட்டுப்புழு வளக்கறதுக்கு லோன் வாங்கிட்டா. குளித்தலைல இருந்து அதுக்கு கூடெல்லாம் வந்து எறக்கிட்டுப்போயிட்டாங்க. ஒரே வருசத்துல நல்லா பெருக்க ஆரம்பிச்சிருச்சு. அவளப்பாத்து ஊருப்பொம்பளைங்க கொஞ்சம்பேரும் சேர அடுத்த வருசம் குளித்தல தாலுக்காவுல அவங்க குழுதான் நெறய லாபம் பாத்துதுன்னு அதிகாரிங்க எல்லாம் பாராட்டுனாங்க.புருசன் வுட்டுட்டு ஓடுனாலும் ஒத்தப் பொம்பளையாவே ஆறுமுவம்பொண்டாட்டி நாலு புள்ளைங்களையும் கர சேத்துடுவான்னு ஊருக்குள்ள ஆம்பளைங்களும் பேசிக்கிட்டாங்க.

அந்த வருசம் தேர்தல்ல பிள்ளாபாளையம் பஞ்சாயத்து தலைவர் பதவி பொம்பளைங்களக்குனு ஒதுக்கியிருந்தாங்க. பொனாசிப்பட்டில இருந்து அந்த பஞ்சாயத்துக்கு மூனு மெம்பருங்க. மகிளிப்பட்டியில ரெண்டு, தெக்கியூர்ல மூனு. மொத்தம் பதனஞ்சு மெம்பருங்க பஞ்சாயத்துல இந்த மூனூருக்காரங்க மெஜாரிட்டி வந்தா அதுல யாரோ ஒருத்தர் தலைவராயிடலாம். மீதி ரெண்டு ஊர்க்காரங்க சம்மதம் வாங்கி போட்டியில்லாம யார அனுப்புறதுன்னு முடிவு பேச இச்சி மரத்தடியில கூட்டம் போட்டிருந்தாங்க. ஆறுமுவம்பொண்டாட்டி தான் சரியான ஆளுன்னு பள்ளியோட வாத்தியார் சொன்னதுக்கப்பறம் ஊரே அதுக்கு தலையாட்டுச்சு. மொதல்ல இதுக்கு அவ ஒத்துக்கலன்னாலும், நம்மூரு ஆளு தலைவராயிட்டா, நம்ம கம்மாய தூருவாரலாம், நம்மூருக்கு பெரிய பள்ளியோடம் கட்டலாம்னு சொல்லி அவள சம்மதிக்க வச்சிட்டாங்க. மூனூரு சனமும் ஒத்துமையா இருந்ததுல அவளே செயிச்சு தலைவராயிட்டா. முடிவு தெரிஞ்சன்னைக்கு பொனாசிப்பட்டியில வேட்டு வெடிச்சுக் கொண்டாடி, சாயுங்காலம் கூட்டம் போட்டிருந்தாங்க. பள்ளியோட வாத்தியாரு எல்லாருக்கும் முட்டாய்க்கொடுத்துக்கிட்டே சந்தோசமா சொல்லிக்கிட்டு இருந்தாரு 'நம்ம ஆறுமுவம் பொண்டாட்டிதான் இனிமே பிள்ளபாளையத்துக்கே பஞ்சாயத்துத் தலைவர்!'

அப்பறமா அவ பேச ஆரம்பிச்சா... 'எம்பேரு ஆறுமுவம் பொண்டாட்டியில்ல...லெச்சுமி. நம்மூருக்கு…'
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.